வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டலத் தளம்பல், குறைந்த காற்றழுத்தப் பிரதேசமாக மாறி, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை அமைப்பின் தாக்கம் எதிர்வரும் நவம்பர் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இலங்கையை நேரடியாகப் பாதிக்கக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய நிலையில் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்குப் போதுமான தரவுகள் கிடைக்கவில்லை எனவும், மேலதிக ஆய்வுகளுக்குப் பின்னர் அவசியமான எச்சரிக்கைகள் விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாட்டின் கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்தால், இலங்கை கடுமையான வானிலை தாக்கங்களைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை நிலைமையைப் பொறுத்தவரை, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



