• Home
  • ஆன்மிகம்
  • வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம எசல பெரஹரா உற்சவம்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்று வழிபாடு!

கதிர்காமம்: வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி மகா ஊர்வலம் நேற்றைய தினம் (29) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹர ராஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, ருஹுணு மகம்பத்துவின் தலைமைச் சங்கநாயக்கரும் கிரிவெஹர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய கோபாவக்க தம்மின்த தேரரைச் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

கிரிவெஹர விகாரை வளாகத்தில் நடைபெற்ற விசேட மத வழிபாடுகளில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கிரிவெஹர விகாரை வளாகத்திற்கான மின்விளக்கு அலங்கார சேவையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மங்கல யானை மீது புனித பேழை வைக்கும் சம்பிரதாய நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து எசல பெரஹரா ஊர்வலத்தைக் கண்டு களித்தார்.

நிகழ்வில் முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share the Post: