ஹஸ்பர் ஏ.எச்
இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான ஆழமான பௌத்த மற்றும் நாகரிகத் தொடர்புகளை கொண்டாடும் வகையில், வேசாக் 2026 ஐ முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
2. தேசிய வேசாக் விழா 2026 இன் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகமும், மாத்தறை மிடெல்லவெல புராண விஹாரையுடன் இணைந்து “இந்தியாவின் பௌத்த பாரம்பரியம்” என்ற சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன. இக்கண்காட்சி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் முன்னிலையில், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 2026 மே 27 முதல் ஜூன் 2 வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய புனிதத் தலங்கள், பண்டைய மடாலயங்கள், தூபிகள், தொல்பொருள் எச்சங்கள் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, இந்தியாவின் ஆழமான பௌத்த மரபு எடுத்துக்காட்டப்பட்டது.
3. வேசாக் பண்டிகை எடுத்துரைக்கும் கருணை மற்றும் தான உணர்வை முன்னிறுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் 2026 மே 30 அன்று கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் (ACBC) வளாகத்தில் சிறப்பு தானசாலை (Dansal) ஒன்றை ஏற்பாடு செய்தது. மேலும், இந்தியாவின் Shree Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti (BMVSS) அமைப்புடன் இணைந்து, தேவையுடையோருக்கு இலவச செயற்கைக் கால்களை வழங்கும் “சாவி சுவா” (Sawi Suwa) எனப் பெயரிடப்பட்ட Jaipur Foot India Centre மையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதையும் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ACBC இணைந்து குறித்தன.
4. புனித வேசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இந்திய உயர்ஸ்தானிகராலயம் “தம்ம சாயா” (Dhamma Chhaya) என்ற கண்காட்சியையும் ஏற்பாடு செய்தது. இது 2026 மே 31 அன்று கொழும்பிலுள்ள கங்காராமய கோவிலின் சீமா மாலகாவில், இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சி ஜூன் 2 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். புது தில்லி தேசிய அருங்காட்சியகம் மற்றும் கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட இக்கண்காட்சி, இந்தியக் கலையில் பிரதிபலிக்கப்படும் கௌதம புத்தரின் வாழ்க்கைப் பயணத்தை காட்சிப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, இளம் தலைமுறையினரிடையே பௌத்த விழுமியங்களையும் கலாசாரப் புரிதலையும் ஊக்குவிக்கும் நோக்கில், ஜாதகக் கதைகளின் சிங்கள மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸ் நூல்களும் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
5. இந்நிகழ்வுகள் அனைத்தும், இந்திய அரசாங்கமும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான பௌத்த பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் முன்னர், 2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தபடி, குஜராத் மாநிலத்தின் தேவ்நிமோரி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித பௌத்த தாதுக்களின் சிறப்பு பொதுக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பத்து இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கு முன்னரும் சார்நாத் மற்றும் கபிலவஸ்து பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2020 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 9,000 பௌத்த விஹாரைகளுக்கும் பிரிவேணாக்களுக்கும் சூரிய மின்சக்தி மூலம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2025 ஏப்ரலில் நடைபெற்ற தனது அரசுமுறைப் பயணத்தின் போது, பிரதமர் மோடி அவர்கள் அனுராதபுரம் புனித நகர வளாக அபிவிருத்தித் திட்டத்திற்கும் இந்திய உதவியை அறிவித்தார்.
6. இவ்வாறு பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் ஆழப்படுத்துகிறது.









