• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வல்வெட்டித்துறையில் 1 கோடியே 15 லட்சம் கொள்ளை: புகைக்கூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 16, 19 வயது சிறுவர்கள் கைது – நெடுங்கேணியில் புதைக்கப்பட்ட பணம் மீட்பு!

வல்வெட்டித்துறையில் 1 கோடியே 15 லட்சம் கொள்ளை: புகைக்கூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 16, 19 வயது சிறுவர்கள் கைது – நெடுங்கேணியில் புதைக்கப்பட்ட பணம் மீட்பு!

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்து, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்களான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி பகல் வேளையில், குறித்த வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள், வீட்டின் புகைக்கூட்டை (புகைபோக்கி) உடைத்து உள்ளே இறங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளைத் துரிதப்படுத்தினர். இதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் ஒருவரை வல்லைச் சந்தியிலும், மற்றவரை யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து வல்வெட்டித்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வீடியோ கால் மூலம் நடந்த திட்டம்: கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டிற்குள் நுழைந்து பணப்பையைக் கண்டெடுத்த கொள்ளையர்கள், அதில் அதிகளவிலான பணம் இருப்பதை அவதானித்து, உடனடியாக நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு ‘வாட்ஸ்அப் வீடியோ கால்’ (காணொளி அழைப்பு) மூலம் காட்டியுள்ளனர். அதனைக் கண்ட நெடுங்கேணி நபர், “அங்கிருக்கும் முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு உடனே புறப்படுமாறு” கட்டளையிட்டுள்ளார்.

அதற்கமைய, கொள்ளையடிக்கப்பட்ட முழுப் பணமும் நெடுங்கேணிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள காணியொன்றில் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. பணத்தைப் புதைத்துவிட்டு, இவ்விருவரும் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய போதே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பணத்தைப் புதைக்கத் திட்டமிட்ட நெடுங்கேணி நபரைத் தேடி பொலிஸார் அங்கு சென்ற போது அவர் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். எனினும், காணியில் புதைக்கப்பட்டிருந்த பணத்தில் 74 லட்சம் ரூபாய் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக் காவலில் வைத்து, எஞ்சிய பணத்தை மீட்கவும், தலைமறைவாகியுள்ள பிரதான சூத்திரதாரியைக் கைது செய்யவும் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post:

Related Posts