இலங்கை – ஜெர்மன் வர்த்தக மன்றம் 2026 (Sri Lankan – German Business Forum 2026) நிகழ்வை முன்னிட்டு, கொழும்பிலுள்ள ஜெர்மனி தூதுவர் இல்லத்தில் விசேட உயர்தர தேநீர் விருந்துபசார நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.
இலங்கைக்கான ஜெர்மனியின் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Dr. Felix Neumann) அவர்களின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், இந்நிகழ்வில் விசேட விருந்தினராகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது.
ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளை மேலும் புதிய தளத்திற்குக் கொண்டு செல்வது குறித்து, இங்கு வருகை தந்திருந்த பல்வேறு உயர்மட்டப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகத் துறைச் சார்ந்தவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பம் இதன்போது ஏற்பட்டது.
இவ்வாறான சர்வதேச மட்டத்திலான உயர்தர சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிராந்திய அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கும், உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






