• Home
  • உள்ளூர் செய்திகள்
  • வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம்

வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியுள்ளமைக்கு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வருடத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் வரட்சியின் போது மக்களுக்கான குடிநீரை உள்ளுராட்சி மன்றங்கள் பவுசர்கள் மூலமாக வழங்கிவந்தன. அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது

ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த செலவினங்களுக்கான நிதியொதுக்கீடுகளை நிறுத்தியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள பல கிராம மக்கள் பாதிக்ப்பட்டுள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுத்தெரிவித்தனர்.

இந்நிலையில் வரட்சி ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடைக்கும்வரை எதிர்பார்த்துக்காத்திருக்காது குடிநீரை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் உறுதியளித்துள்ளார்.

கடந்தகாலங்களில் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் லீற்றர் நீர் பவுஸர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் அந்த அளவு போதாதுள்ளதனால் ஒரு நாளைக்கு இரண்டு இலட்சம் லீற்றர் நீரை வழங்க ஏற்பாடு செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வில் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைக்குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் அமர்வு வியாழக்கிழமை (16) நடைபெற்றது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற அதிக வரட்சியின் காரணமாக செங்கலடி- பதுளை வீதியை அண்மித்துள்ள பல கிராமங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பல்வேறு அசளகரியங்களை அனுபவிப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகள் சபை அமர்வில் எடுத்துக்கூறினர்.

இங்கு தவிசாளர் முரளிதரன் பேசுகையில் – கடந்தகாலங்களில் வரட்சி காரணமாக குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும் குக்கிராமங்களுக்கு உள்ளுராட்சிமன்றத்தின் ஊடாக குடிநீர் வழங்கப்பட்டது. இதற்காக அரசாங்கத்தின் நிதியொதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய புதிய சுற்றுநிருபத்தின்படி நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுவது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share the Post: