வத்தளை, கதிரான பள்ளியாவத்த பகுதியில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது நபரொருவரைச் சுட்டுக் கொலை செய்வதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய சந்தேகநபரொருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடானது, கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ‘மட்டக்குளிய குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருந்தது.
ரொஷானுடைய சகோதரர் ஒருவரின் பிள்ளையின் பிறந்தநாள் விருந்தின் போது, நபரொருவர் தலைக்கவசம் அணிந்தவாறு அந்த மண்டபத்திற்குள் நுழைந்து, குறித்த நபரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார்.
எவ்வாறாயினும், இலக்கு தவறியமையால், ரொஷான் என்பவரின் அருகில் நின்ற ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை விசாரணைகளின் பின்னர் தெரியவந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.




