ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரை நேரில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (மே 20) நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில், லண்டனில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கத் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் அரசியல் கலாசாரம் தற்போது எவராலும் மீண்டும் மாற்றியமைக்க முடியாதளவிற்கு, நேர்மறையான ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் உரையாற்றுகையில், நாட்டில் தற்போது அனைத்து சமூகங்களும் சமமாக மதிக்கப்படும் ஒரு சிறந்த ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
வழக்கமான அரசியல் கூட்டங்களைப் போலன்றி, இந்த நிகழ்வில் லண்டன் வாழ் இலங்கை மக்கள் தங்களது கருத்துக்களையும், கேள்விகளையும் பிரதமரிடமும் அமைச்சரிடமும் நேரடியாக முன்வைப்பதற்கான திறந்த மேடை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அரசுப் பணத்தை வீணடிக்காமல், கலந்துகொண்டவர்களின் சொந்தப் பங்களிப்புடன் இந்தச் சந்திப்பு மிகவும் வெளிப்படையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமால் சேனாதீர உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.








