யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று, தாயார் பால் ஊட்டிய சில நிமிடங்களில் திடீரென விறைத்துப்போய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கீரிமலைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற ஒன்றரை மாத பெண் குழந்தையே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி (23.03.2026) தாயொருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில் (15.05.2026) தாயார் வழமை போல ஒரு குழந்தைக்கு பால் கரைத்து ஊட்டியுள்ளார்.
பால் ஊட்டி முடித்த சில நிமிடங்களிலேயே குறித்த குழந்தை திடீரென உடல் விறைத்துப்போன நிலைக்கு ஆளாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை உடனடியாக மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், குழந்தையை பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னரேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒன்றரை மாதப் பிஞ்சுச் சிசுவின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




