மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடி பொதுச் சந்தையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக இன்று (17) திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச். அஸ்பர் அவர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த விஜயத்தின் போது, சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினரும் நகர முதல்வரும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட அசௌகரியங்கள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
சந்தைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கான முறையான வாகன தரிப்பிட வசதியின்மை, கடைகளுக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாமை மற்றும் பொதுமக்கள் நெரிசலின்றி நடமாடுவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட நடைபாதை வசதிகள் காணப்படாமை உள்ளிட்ட பல முக்கிய குறைபாடுகளை வர்த்தகர்களும் பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அடையாளம் காணப்பட்ட இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவாகவும், நிரந்தரமாகவும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதுடன், காத்தான்குடி பொதுச் சந்தையை நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பது குறித்தும் இதன்போது அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














