தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இரு நாட்டு முஸ்லிம் சமூகங்களின் நலன்கள் குறித்துக் கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகங்களின் நலன்கள், சமூக மற்றும் கல்விசார் முன்னேற்றங்கள், இருதரப்புப் பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், தமிழகத்திலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இச் சந்திப்பானது இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான சமூக மற்றும் கலாச்சார நல்லுறவுப் பாலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது






