நீண்டகாலமாக தாமதமடைந்துள்ள கீழ் மல்வத்து ஓயா பலநோக்கு அபிவிருத்தித் திட்டப் பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் அதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள்:
வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக உருவாக்கப்படும் இத்திட்டத்தை 2029-2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டு நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் (5 பில்லியன்) ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தந்திரிமலை போகோட பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் 3.4 கிலோமீற்றர் பிரதான அணையின் 60% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
திட்டத்தினால் இடம்பெயரும் 315 குடும்பங்களுக்குக் காணி மற்றும் மின்சாரம், குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், மன்னார் ‘சஹல் நெலிய’ பகுதியில் 40,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் போக இரு பருவங்களிலும் முழுமையாக நீர் வழங்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எவ்வித காலதாமதமும் இன்றி இத்திட்டத்தின் பலன்களைப் பொதுமக்களுக்கு வழங்க விரைந்து செயல்படுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.






