• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் நீண்டகால நில மற்றும் காணி உரிமைகளை வென்றெடுப்பதையும், இவ்விடயம் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 7 வயதுடைய சிறுவன் பிரேமராஜா கார்கி தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெடும் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) இலங்கை அலுவலகத்திற்கும் தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைக் கையளிப்பதற்காகவே இந்த விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை நகரிலிருந்து ஆரம்பமாகியுள்ள இப்பயணம் சுமார் 140 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதுடன், 6 நாட்களுக்குள் கொழும்பைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும், லிந்துலை இல்டன்ஹோல் தோட்டத்தைச் (இலக்கம் 06 லயம்) சேர்ந்த இந்தச் சிறுவன் மற்றும் குழுவினர், தமது பயணத்தின் இடையே கொட்டகலை நகரை அடைந்தபோது அங்குள்ள வர்த்தக சமூகத்தினராலும் பொதுமக்களாலும் பொன்னாடை போர்த்தப்பட்டு மிகவும் உளமார்ந்த மற்றும் உற்சாகமான வரவேற்பளித்து கௌரவிக்கப்பட்டனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்தச் சிறுவன் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts