மரதானையில் அதிரடி சோதனை: ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 21 வெளிநாட்டவர்கள் கைது!

கொழும்பு – மரதானை பகுதியிலுள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய ஆன்லைன் நிதி மோசடி மையம் (Online Scam Centre) ஒன்றைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) குடிவரவு குடியகல்வுத் திணைக்களமும் இணைந்து அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளன.

காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மரதானை டெக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட 21 வெளிநாட்டவர்கள் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 12 சீன நாட்டவர்கள் (இரு பெண்கள் உட்பட), 6 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் 3 இந்திய நாட்டவர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரையும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Share the Post: