(கனகராஜா சரவணன்)
இலங்கையின் இரண்டாவது நீளமான மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் உணவகம் ஒன்றை கல்லடியில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டல் உல்லாச துறையை ஊக்குவிக்கும் முகமாக முதன் முதலாக அறிமுகப்படுத்தி நேற்று சனிக்கிழமை (24) சம்பிரதாய பூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் இணைந்து நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.
கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டல் உரிமையாளர் சரண்ராஜ் உல்லாச பயணிகளை கவரும் திட்டத்தில் மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் உணவகமான படகு சேவை ஒன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது
இந்த நிகழ்வில் அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர், வர்த்தகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர், மாவட்ட சுற்றுலாத்துறை பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டு மிதக்கும் உணவகமான படகு சேவையை சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்து ஆரம்பித்தனர்.
இந்த மிதக்கும் உணவக படகில் 40 பேர் பயணித்து கொண்டு உணவு உண்ண முடியும் என்பதுடன் இங்கு மதுபானம் புகைத்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது டன் வெளியில் இருந்து உணவுகளை எடுத்து வர முடியாது எனவும் பல கட்டுப்பாட்டின் கீழ் இந்த மிதக்கும் உணவு படகு சேவை இடம்பெறும் எனவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.




