உகன நவகிரியா பகுதியில் காட்டு யானை அட்டகாசம்- வீடு பலத்த சேதம்

[அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்]

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது.

இன்று(25)  அதிகாலை வேளையில் கிராமத்திற்குள் ஊடுருவிய இக்காட்டு யானை, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுவர்கள் மற்றும் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ள போதிலும், வீட்டிலிருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், உகன  பகுதியிலும் தொடர்ந்து இடம்பெறும் இத்தகைய சம்பவங்களால் அப்பகுதி மக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் உறைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதோடு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதைத் தடுக்க வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.–

Share the Post: