மட்டக்களப்பு – மகிழவட்டுவான் ஆயித்தியமலை பிரதான வீதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் (Tractor) எதிர்பாராதவிதமாக மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த மோதலின் வீரியத்தில் ஒரு இளைஞர் உழவு இயந்திரத்தின் அடியில் சிக்கி, தனது ஒரு காலை முழுமையாக இழக்கும் அளவுக்கு மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞரின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து சம்பவித்த உடனடியாக, அங்கிருந்தவர்களின் உதவியுடன் 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் இரு இளைஞர்களும் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் ஈச்சந்தீவு மற்றும் ஆயித்தியமலைப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






