• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் “கஞ்சி வாரம்”: வலி சுமந்த உறவுகள் கண்ணீருடன் பங்கேற்பு

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் “கஞ்சி வாரம்”: வலி சுமந்த உறவுகள் கண்ணீருடன் பங்கேற்பு

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 17-வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நினைவேந்தல் நிகழ்வான “கஞ்சி வாரம்” இன்று (12) உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியினை மக்களுக்கு வழங்கி நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

2009-ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, உணவின்றியும் குடிநீரின்றியும் தவித்த தமிழ் மக்களின் உயிர் காக்கும் உணவாகத் திகழ்ந்த கஞ்சியை நினைவுகூரும் வகையிலும், அந்தத் துயரமான நாட்களை இளைய தலைமுறைக்குக் கடத்தும் வகையிலும் இந்த கஞ்சி வாரம் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நிகழ்வின் போது, உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு இடங்களிலும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share the Post: