• Home
  • Uncategorized
  • புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு!

புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய மைதான மலசலக் கூடத்திற்கு அடிக்கல்; புத்தளம் மாவட்ட எம்பிக்கள் பங்கேற்பு!

புத்தளம், முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட P/புளுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய (Puluthivayal G.M.V) மாணவர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த விளையாட்டு மைதானத்திற்கான புதிய மலசலக் கூட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (SDC) தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க, இப்பகுதியின் பிரஜா சக்தி தலைவர் திரு. ரிபாய் அவர்களின் அயராத முயற்சியினாலும் ஒருங்கிணைப்பினாலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. முகமது பைசல் (Mohamed Faizal) மற்றும் திரு. கயான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன், நிகழ்வையும் சிறப்பித்தனர்.

மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தவும், அவர்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்யவும் முன்னெடுக்கப்படும் இத்தகைய உள்கட்டமைப்பு முயற்சிகள், எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கும் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விழாவில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், முந்தல் பிரதேச செயலக அதிகாரிகள், உள்ளூர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கிராம உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவை நல்கியிருந்தனர்.

பாடசாலை மாணவர்களின் இந்த நீண்ட காலக் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் உழைத்த மற்றும் இந்நிகழ்வில் வருகை தந்து சிறப்பித்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாடசாலை நிர்வாகத்தினரும், ஊர்மக்களும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்

Share the Post: