பொதுப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நாடு தழுவிய ரீதியில் விசேட அதிரடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட விசேட ஆபத்தான போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, நுகேகொடையில் 5 சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி தேசிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், நேற்று (26) காலை நுகேகொடை பஸ் நிலையத்தில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்திய அதிகாரி டொக்டர் லயனல் முஹந்திரம்கே தலைமையிலான மருத்துவக் குழுவினர், நடமாடும் ஆய்வுகூட பஸ் (Mobile Laboratory Bus) வசதியைப் பயன்படுத்தி இச்சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, குறித்த பஸ் நிலையத்திலிருந்த 172 பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் (நடத்துனர்கள்) கடுமையான சிறுநீர் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆரம்பகட்டப் பரிசோதனைகளின் முடிவில், 05 சாரதிகள் ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்திய வண்ணம் வாகனங்களைச் செலுத்தியமை ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்தமை உறுதியான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இவ்விடயம் தொடர்பாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபை பஸ் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. “முறையான மருத்துவப் பரிசோதனை அறிக்கை (Medical Report) இல்லாத பஸ் ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு பஸ்ஸிற்கும் இனிமேல் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது” என அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
குடிபோதையில் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதிகளைக் கண்டறியும் இத்தகைய திடீர் ரெய்டு நடவடிக்கைகள், மேல் மாகாணம் உட்பட நாடு முழுவதும் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.









