டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகை உரிய மாணவியிடம் மீள ஒப்படைப்பு : நேர்மையை வெளிப்படுத்திய தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிக்கு பாராட்டு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஜூலை 25ஆம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தில் பெறுமதியான தங்க நகை ஒன்று கிடந்த நிலையில், அதனை கலை கலாசார பீடத்தின் மொழித்துறையில் விசேட தரத்தில் கல்வி கற்றுவரும் வேருவலை, தர்கா நகரைச்சேர்ந்த எம்.ஏ.பி. அப்றா என்ற மாணவி கண்டெடுத்துள்ளார்.
குறித்த நகையை அவர் எவ்வித தயக்கமுமின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னாவிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் அது பதிவாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், நகையின் உரிமையாளரை அடையாளம் கண்டு அவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பதிவாளர் மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க நகையின் உரிமையாளர் பொத்துவிலைச் சேர்ந்த மு.அ. பாத்திமா அன்பால் என அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, இன்று (2026.08.11) நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த நகை உரிய மாணவியிடம் உத்தியோகபூர்வமாக மீளக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பிரதி பதிவாளர் எப்.பாரிஷா எம். ஹசன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அகமட் அஸ்ஹர் விரிவுரையாளர் எம்.ஐ. பாத்திமா சப்னா மற்றும் மாணவியின் தந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகையின் உரிமையாளரான மாணவி, தாம் தொலைத்த பெறுமதியான நகையை நேர்மையாகக் கண்டெடுத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்த எம்.ஏ.பி. அப்றா என்ற மாணவிக்கும், அதனை உரியவரிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
பெறுமதியான பொருளைக் கண்டெடுத்தும் அதனை தன்வசம் வைத்துக்கொள்ளாமல் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைத்த மாணவி அப்றாவின் செயற்பாடு, நேர்மை, பொறுப்பு மற்றும் மனிதநேயத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பல்கலைக்கழக சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.





