நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் இன்று (04) காலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது. இந்தத் கொடூர விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்தையடுத்து நாவலப்பிட்டி பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து முச்சக்கரவண்டியை நசுக்கியவாறு கிடந்த மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, தற்போது நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
“நெடுங்காலமாக பழுதடைந்த நிலையில் ஆபத்தான முறையில் காணப்பட்ட இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கு முறையான எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கே இன்று மூன்று உயிர்கள் பலியாகக் காரணமாகியுள்ளது” என பிரதேசவாசிகள் கடும் ஆத்திரத்துடன் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.




