காலி பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பகுதியில் இடம்பெற்ற சொத்துத் திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபராகக் கருதப்பட்ட நபர் ஒருவரை, சிலர் மிகக் கொடூரமான முறையில் தாக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.இதற்கிடையில், குறித்த சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக காலி பொலிஸாரால் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனை, திருட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இது குறித்து சிறுவனின் தாயாரால் காலி பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளிச் சான்றுகளைக் கொண்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இத்தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




