• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகும் எனக் எச்சரிக்கை!

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்: அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகும் எனக் எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் நிலவி வரும் தளம்பல் நிலை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் புதிய தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக, இன்று (21) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மழை தீவிரமடையக்கூடும்.

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்ற வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share the Post: