• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்!

நாடாளுமன்ற தீர்மானங்களையும் மீறிய வன்முறை: வெலிமடையில் தொழிலாளி மீது தோட்ட அதிகாரி தாக்குதல்!

வெலிமடை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விசேட தீர்மானங்கள் எட்டப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களிலேயே, வெலிமடை டயரபா (Dyraba) பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது.

டயரபா பெருந்தோட்டப் பகுதியின் உதவி முகாமையாளர் (Assistant Manager) ஒருவரினால், அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவர் நேற்று (மே 22) கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக வெலிமடை காவல்நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை வெலிமடை உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீது நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று விசேட விவாதங்கள் நடத்தப்பட்டு, கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, சட்டத்தை சற்றும் மதிக்காத வகையில் இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, நேற்று காலை தோட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான வாக்குவாதம் ஒன்றே இந்தத் வன்முறையாக மாறியுள்ளதாகத் தெரியவருகிறது.

தற்போது தாக்குதலுக்கு உள்ளான பெருந்தோட்டத் தொழிலாளி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அதேவேளை, இச்சம்பவத்தில் திருப்பமாக, குறித்த தொழிலாளியால் தாமும் தாக்கப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட தோட்ட உதவி அதிகாரியும் மற்றுமொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share the Post:

Related Posts