இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மொரகல்ல பகுதியில் அமைந்துள்ள முன்னணி சொகுசு சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் இன்று (23) காலை மனித தலை ஒன்று அலைகளால் அடித்து வரப்பட்டு ஒதுங்கியுள்ளது. கடற்கரையில் கிடந்த விசித்திரமான பொருளை அவதானித்தவர்கள், அது மனித தலை என்பதை அறிந்து உடனடியாக அளுத்கம பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அளுத்கம பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் குறித்த மனித தலையை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மீட்கப்பட்ட தலை ஆண் ஒருவருடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. யாராவது இவரைக் கொலை செய்து, உடலைத் துண்டித்துக் கடலில் வீசியிருக்கலாம் என்றும், அதன் பின்னரே தலை அலையடித்துக் கரைக்கு ஒதுங்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




