வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ திருவிழா பத்திரிகையும், காளாஞ்சியும் தேவஸ்தானத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையிடம் இன்று (17) சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தினரால் பாரம்பரிய வழக்கப்படி கொண்டுவரப்பட்ட திருவிழா பத்திரிகை மற்றும் காளாஞ்சி என்பனவற்றை, யாழ் மாநகர சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பக்திப் பூர்வமாக உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நல்லைக் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னதாக, அதற்கான பத்திரிகையை மாநகர சபையிடம் கையளித்து, விழா ஏற்பாடுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் மரபு நீண்டகாலமாகப் பேணப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இம்முறை மகோற்சவ காலத்தின் போது ஆலயத்திற்கு வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கான தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், சுகாதார ஏற்பாடுகள் மற்றும் வீதி ஒழுங்கமைப்புகள் போன்ற பொது மக்கள் நலம் சார்ந்த பணிகளை யாழ் மாநகர சபை முடுக்கிவிடவுள்ளது.
இதேவேளை, உலகெங்கிலும் உள்ள இந்துப் பெருமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் இவ்வாண்டிற்கான மகோற்சவப் பெருவிழா, வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் மிக விமசையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







