• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • களனி ரயில் விபத்து: தண்டவாள ஆணிகளைக் கழற்றிய போதைக்கு அடிமையான இளைஞர் கைது – வீட்டில் பாரிய உபகரணங்கள் மீட்பு

களனி ரயில் விபத்து: தண்டவாள ஆணிகளைக் கழற்றிய போதைக்கு அடிமையான இளைஞர் கைது – வீட்டில் பாரிய உபகரணங்கள் மீட்பு

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (16) அதிகாலை இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தைத் தொடர்ந்து, ரயில் பாதையின் ஆணிகளைக் கழற்றி சதிவேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து பல முக்கிய உபகரணங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பொல்கஹவெலவிலிருந்து களுத்துறை தெற்கு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்திருந்தனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸாரால் வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் போதைப்பொருள் வாங்குவதற்காக தண்டவாள ஆணிகளைக் கழற்றி விற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வீட்டிற்குள் பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, ரயிலின் தண்டவாளங்களை மாற்றுவதற்கும் ஆணிகளைக் கழற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் 03 பெரிய இரும்பு லீவர்கள் (Iron Levers) உள்ளிட்ட பாரிய உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மங்கள அஜித் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இதனுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்யவும் வலைவீசியுள்ளனர்.

Share the Post:

Related Posts