இலங்கை அரசாங்கத்தினால் கல்வியியல் துறையில் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் பொருட்டு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதான ‘குரு பிரதீபா’ (Guru Prathibha) விருதினை, மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் யு.எல். மன்சூர் (SLPS) பெற்றுக்கொண்டார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில் பிரதமர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய ஆசிரியர் தினக் கௌரவிப்பு விழாவின் போது, அதிபர் யு.எல். மன்சூருக்கு இவ்விருது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், நாட்டின் பல முன்னணி தேசிய பாடசாலைகளில் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கடமையாற்றி பரந்த நிர்வாக அனுபவம் கொண்டவராவார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களில் மெய்யான அக்கறையுடன் செயற்படும் பண்பாளரான இவர், தனது ஓய்வுக்காலத்தை நெருங்கியுள்ள வேளையில் இத்தகைய உயரிய தேசிய கௌரவத்தைப் பெற்றுள்ளமை அவரது நீண்டகாலக் கல்விச் சேவைக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும்.
தேசிய விருது பெற்று ஊர் திரும்பிய அதிபர் யு.எல். மன்சூர் அவர்களுக்கு கடந்த 08.10.2026 அன்று காத்தான்குடி சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பும் கௌரவமும் அளிக்கப்பட்டது.

இப்பாராட்டு நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் செயற்குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA) மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளையும் பூரண ஒத்துழைப்பையும் வழங்கி சிறப்பித்தனர்.









