பனாமாவின் மத்திய பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலஅதிர்வினால் கட்டிடங்கள், வீதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.
சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பனாமா நகரம் முழுவதும் மிகக் கடுமையாக உணரப்பட்டதுடன், பக்கத்து நாடான கொலம்பியா வரையிலும் உணரப்பட்டுள்ளது. உயர்கோபுரக் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளன. சில பகுதிகளில் மின்சாரத் தடை மற்றும் வீதிப் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மிக முக்கிய போக்குவரத்து வழியான பனாமா கால்வாய் (Panama Canal) மற்றும் சர்வதேச விமான நிலையப் போக்குவரத்துகள் சீராக இயங்கி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.






