யாழ்ப்பாணம், தென் மட்டுவில் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வேரக்கேணி கந்தசுவாமி ஆலயத்தின் பராபவ வருட (2026) திவ்ய மகோற்சவ பெருவிழா தற்பொழுது மிகவும் பக்திப் பூர்வமாக நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக, நேற்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தின் நான்காம் நாள் திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன்போது விக்னேஸ்வர பூஜை, தம்பபூஜை மற்றும் மூலமூர்த்திக்கும் உற்சவமூர்த்திக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் என்பன நடைபெற்றன.
தொடர்ந்து, வசந்த மண்டப பூஜைகளை அடுத்து எம்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். இந்நாட்களில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது, மட்டுவில் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெருமளவிலான அடியார்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொண்டனர்.









