கம்பளை நகரில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக, கம்பளை சாஹிரா கல்லூரியின் தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்கள் கல்வி கற்கும் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்து வகுப்பறைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (24) நள்ளிரவு கம்பளை நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் திடீரென கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் போதே, பாடசாலை வளாகத்தில் இருந்த பிரம்மாண்டமான மரமொன்று வேருடன் முறிந்து, தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறை கட்டிடத் தொகுதியின் கூரையின் மீது விழுந்துள்ளது.
இந்த அனர்த்தம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றமையினால், வகுப்பறைகளில் மாணவர்கள் எவரும் இருக்கவில்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதங்கள் எற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ள போதிலும், கட்டிடத்தின் கூரை மற்றும் சுவர்களுக்குப் பாரியளவில் பெளதீகச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் சேதமடைந்த வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உடனடியாகச் செயற்பட்டனர். இதன்படி, குறித்த கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக இயங்கி வந்த 6 வகுப்பறைகள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டு, பாதுகாப்பான மாற்று இடங்களுக்கு அவசரமாக இடமாற்றப்பட்டுள்ளன.
முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகளில் பாடசாலை சமூகத்தினரும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










