• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • தென் கொரியக் கப்பல் மீதான தாக்குதல்: ஈரானிய இராணுவத்திற்குத் தொடர்பில்லை என ஈரான் தூதரகம் திட்டவட்டமான மறுப்பு!

தென் கொரியக் கப்பல் மீதான தாக்குதல்: ஈரானிய இராணுவத்திற்குத் தொடர்பில்லை என ஈரான் தூதரகம் திட்டவட்டமான மறுப்பு!

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தென் கொரியாவினால் இயக்கப்படும் சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திற்கும், ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என சியோலில் உள்ள ஈரானிய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

கடந்த திங்கட்கிழமை (மே 04), தென் கொரியாவின் ‘HMM’ நிறுவனத்தினால் இயக்கப்படும் ‘HMM Namu’ என்ற சரக்குக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த போது திடீர் வெடிப்புச் சம்பவத்திற்கு உள்ளானது. இந்த வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த தீ விபத்தினால் கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்தச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சியோலில் உள்ள ஈரானிய தூதரகம் வலுவாக நிராகரிப்பதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஹார்முஸ் நீரிணையில் கொரியக் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கும், ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை ஈரான் தூதரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் நீரிணை என்பது ஈரானின் பாதுகாப்புக் புவியியலில் ஒரு முக்கிய அங்கமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தூதரகம், அந்தப் பாதையூடான பாதுகாப்பான பயணத்திற்கு முறையான விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறிச் செயற்படுவதால் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

கப்பலில் இருந்த 24 ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ள நிலையில், கப்பல் தற்போது மேலதிக திருத்தப் பணிகளுக்காக துபாய்க்கு இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென் கொரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share the Post: