மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 81/2026 எண் கொண்ட அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் எனது கருத்துகளை எடுத்துரைக்க விழைகின்றேன்.
அறக்கட்டளை அல்லது நம்பிக்கைப் பொறுப்பு என்பது, ஒருவர் தனது சொத்துக்களை அல்லது நிதி வளங்களை மற்றொருவரது பொறுப்பில் ஒப்படைத்து, குறிப்பிட்ட பயனாளிகளின் நலனுக்காக நிருவகிக்க ஏற்படுத்தும் ஒரு சட்ட உறவாகும்.
அறக்கட்டளைகள் திருத்தச் சட்ட மூலமானது; 1917ஆம் ஆண்டின் ஒன்பதாம் எண் கொண்ட அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்தின் 87ஆம் அத்தியாயம், 2018ஆம் ஆண்டின் ஆறாம் எண் கொண்ட திருத்தச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட அறக்கட்டளை நிருவாகக் கட்டமைப்பில் ஒரு முதன்மையானச் சீர்திருத்தத்தை முன்மொழிகிறது.
அறக்கட்டளைகளின் வெளிப்படைத்தன்மையும் உண்மையான பயனாளிகளைக் கண்டறிவதையும் உறுதிசெய்வதே இச்சட்டமூலத்தின் முதன்மை நோக்கமாகும்.
இது வரலாற்று அடிப்படையில் தனிப்பட்ட வரம்புக்குள் இருந்த அறக்கட்டளை நிருவாகத்தை, ஒரு முறைப் படுத்தப்பட்ட பொது ஒழுங்குமுறைக் கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறது. இதன் வழியாகச் சட்டத்துக்கு முரணான நிதிப் பாச்சல்கள், வரி ஏய்ப்பு, பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதை இச்சட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இச்சட்டமூலத்தின் முதன்மைச் சிறப்புக் கூறுகள் ; பழைய சட்டத்துடனான ஒப்பீட்டு; இதிலுள்ள பொருளாதார மற்றும் அரசியலமைப்பு அடிப்படையிலான கவலைகள் மற்றும் குழு நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியத் திருத்தங்கள் குறித்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன் .
இத்திருத்தச் சட்ட மூலத்தில் முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நான்கு முதன்மையான தூண்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன:
முதலாவதாக ; இச்சட்டத்தின் பிரிவு 5(1) அல்லது 5(2) இன் கீழ் ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கும் அறங்காவலர்கள், அத்தகைய அறக்கட்டளை ஆவணம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்குள் பதிவாளர் நாயகத்திடம் அதனைப் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு ; இலங்கைக்குள் செயல்படும் எந்தவொரு வெளிநாட்டு அறக்கட்டளையும் உள்ளூர் வைப்பகக் கணக்குத் தொடங்குதல், உள்ளூர் சொத்துக்களை வைத்திருத்தல், உள்ளூர் அறங்காவலரைப் பராமரித்தல் முதலிய தனது செயல்பாடுகளைத் தொடங்கிய நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இச்சட்ட மூலத்தின் பிரிவு 5A நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட அனைத்து அறக்கட்டளைகளும், அப்பிரிவு நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவாளர் நாயகத்தால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ் ஐந்து ஆண்டுகள் வரைச் செல்லுபடியாகும். சான்றிதழ் முடியுறு வதற்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் புதுப் பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டாவதாக; இச்சட்டத்தின் 6A மற்றும் 6B பிரிவுகளுக்கு அமையப் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை விவரங்களில் ஏதேனும் அமைப்பு அல்லது செயற்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டால், அறங்காவலர்கள் அதனை 14 வேலை நாட்களுக்குள் பதிவாளர் நாயகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
சட்டமா அதிபர்; நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), கணக்காய்வாளர் நாயகம், சுங்கப் பணிப்பாளர் நாயகம், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், பணச்சலவை எதிர்ப்பு அதிகாரசபை ஆகியவற்றுக்கு அறக்கட்டளைப் பதிவு தொடர்பான விவரங்கள் பகிரப்படும்.
அறக்கட்டளையை உருவாக்கியோர், அறங்காவலர்கள், பயனாளிகள் மற்றும் பயனுறு உரிமையின் எல்லை முதலியவற்றைப் பார்வையிடப் பொதுமக்களுக்கு அணுகல் வழங்கப்படும்.
மூன்றாவதாக; 19A பிரிவின் கீழ்; ஒர் அறங்காவலர் அல்லது அறக்கட்டளை அமைப்பில் நேரடி அல்லது மறைமுகப் பங்குரிமை, வாக்குரிமை அல்லது நிதி உரிமை மூலம் 10% அல்லது அதற்கு மேற்பட்ட பங்கைக் கொண்டிருக்கும் எந்தவொருவரும் “பயனளிக்கும் உரிமையாளர்” என வரையறுக்கப்படுகிறது.
அறக்கட்டளையின் நிருவாகம், முதலீட்டு முடிவுகள் அல்லது அறங்காவலர் நியமனங்கள் மீது நேரடி அல்லது மறைமுக, கட்டுப்பாடு செலுத்தும் எந்தவொருவருக்கும் இச்சட்டம் பொருந்தும்.
நான்காவதாக ; இச்சட்டத்தின் 19C பிரிவின் கீழ் பதிவு செய்யத் தவறுதல் அல்லது தவறான விவரங்களை வழங்குதல் குற்றவியல் குற்றமாகக் கருதப்படும். இதற்கு நீதவான் நீதிமன்றத்தால் மூன்று மில்லியன் ரூபா வரைத் தண்டப்பணம் மற்றும் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சட்டத்தின் 19D மற்றும் 19E பிரிவுகளின் கீழ் சிறிய நடைமுறைத் தவறுகளுக்கு நேரடியாக நிருவாகத் தண்டப்பணத்தை விதிக்க பதிவாளர் நாயகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நிருவாகத் தண்டப்பணத்தைச் செலுத்துபவருக்குக் குற்றவியல் வழக்குகளிலிருந்து சட்ட அடிப்படையிலான விலக்களிப்பு வழங்கப்படும்.
நிருவாகத் தண்டப்பண விதிப்புக்கு எதிராக அமைச்சின் செயலாளருக்கும்மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இச்சட்டமூலத்தின் நன்மைகளை ஏற்கும் அதே வேளையில், இதிலுள்ள சில அறைகூவல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்:
முதாலவதாக ; வணிக அறக்கட்டளைகள், சிறிய குடும்ப அறக்கட்டளைகள் ,பொது தொண்டு அறக்கட்டளைகள் ஆகிய அனைத்திற்கும் ஒரே மாதிரியான பதிவு மற்றும் 5 ஆண்டு புதுப்பித்தல் கட்டணங்களை விதிப்பது இவற்றைப் பாதிக்கும்.
இரண்டாவதாக ; வெளிநாட்டு அறக்கட்டளைகளை மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் மற்றும் அவர்களது விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதி, தனி
உரிமையை விரும்பும் பன்னாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதிலிருந்து பின்வாங்கச் செய்யும் .
மூன்றாவதாக ; ஆயிரக்கணக்கான அறக்கட்டளைகளை ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்வதும், 14 நாட்களுக்குள் மாற்றங்களைச் சரிபார்ப்பதும் பதிவாளர் நாயகத்
திணைக்களத்துக்கு ஒரு பெரும் அறைகூவலாக இருக்கும் .
நான்காவதாக ; இச்சட்டத்தின் 6B(1A) பிரிவின் கீழ் பயனாளிகளின் விவரங்களைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது, அரசியலமைப்பின் 14(1) உறுப்புரையின் கீழ் தனியுரிமை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது.
ஐந்தாவதாக ; 14 வேலை நாட்களுக்குள் மாற்றங்களை அறிவிக்கத் தவறுவது முதலிய சிறிய நடைமுறைத் தவறுகளுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் மூன்று மில்லியன் ரூபா தண்டப்பணம் என்பது மிகவும் கடுமையானது.
இந்தச் சட்டமூலத்தை மேலும் வலுப்படுத்த பின்வரும் திருத்தங்களை குழு நிலையில் சேர்க்குமாறு நான் முன்மொழிகின்றேன்:
முதலாவதாக சிறிய குடும்ப அறக்கட்டளைகளுக்கு எளிமையான ஆண்டு அறிகையிடல் நடைமுறையை
அறிமுக ப்படுத்த வேண்டும். தொண்டு மற்றும் சமூக அறக் கட்டளைகளுக்கு இணக்கக் காலக் கெடுவை ஆறு மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்த வேண்டும்.
இரண்டாவதாக பொதுமக்கள் பார்வையிடும் தளத்தில் அறக்கட்டளையின் பதிவு எண் மற்றும் தொடர்பு விவரங்களை மட்டுமே காட்ட வேண்டும். பயனாளிகளின் பெயர்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளைக் காட்ட வேண்டியதில்லை .
மூன்றாவதாக ; தண்டம் அல்லது குற்றவியல் வழக்குத் தொடர்வதற்கு முன்னர், தவறுகளைச் சரிசெய்ய 30 நாட்கள் காலக்கெடு வழங்கி அறிவித்தல் அனுப்ப வேண்டும்.
நான்காவதாக; திட்டமிட்ட நிதிக் குற்றங்கள் மற்றும் பணச்சலவைக்கு மட்டுமே 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும். சாதாரண தாமதங்களுக்குச் சிறிய நிதி தண்டங்கள் மட்டுமே விதிக்க வேண்டும்.
ஐந்தாவதாக; பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இணையவழி மின்-பதிவுத் தளத்தை நிறுவுவதோடு, குழுமங்களின் பதிவாளர் (ROC), நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் உள் நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) ஆகியவற்றோடு தரவுத்தளங்களை எண்மிய முறையில் இணைக்கவும் வேண்டும்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, 2026 ஆம் ஆண்டின் அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலமானது; நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கும் பன்னாட்டுத் தரநிலைகளை எட்டுவதற்கும் மிகவும் தேவையான ஒரு சட்ட மூலமாகும். இருப்பினும், சட்ட நடைமுறைப் படுத்தலுக்கும் அரசியலமைப்பு வழங்கும் தனி உரிமைகளுக்கும் இடையே சரியான சமநிலையைப் பேணுவது எமது கடமையாகும்.
மேற்குறிப்பிட்ட திருத்தங்களை குழு நிலையில் உள்ளடக்குவதன் மூலம், இலங்கையின் நிதி அமைப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், நேர்மையான அறக்கட்டளை நிருவாகத்தையும் உறுதிசெய்யும் ஒரு சிறந்த சட்டத்தை இச் சபைஉருவாக்க முடியும் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.




