திருகோணமலை மாவட்டத்தில் கள விஜயத்தின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரடியாக அவதானிக்கப்பட்ட தபால் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று(18) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
. ஊழியர் பற்றாக்குறை
மாவட்டத்தில் உள்ள பல தபால் அலுவலகங்களில், அப்பகுதியின் அஞ்சல் அட்டைகளின் எண்ணிக்கைக்கும் சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்ப போதுமான தபால்காரர்கள் மற்றும் அஞ்சல் விநியோகப் பணியாளர்கள் குறைவு. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் சேவையில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, ஒவ்வொரு தபால் அலுவலகத்தின் பணிகளுக்கு ஏற்ப தேவையான மனிதவளத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல்
தற்போது தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் உள்ளனர். அவர்களின் சேவை அனுபவத்தையும் தகுதியையும் கருத்திற்கொண்டு, அவர்களை நிரந்தர சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
தபால் அலுவலகக் கட்டிடங்களின் அபிவிருத்தி
திருகோணமலை மாவட்டத்தில் பல தபால் அலுவலகங்களின் கட்டிடங்கள் பழமையான நிலையில் காணப்படுகின்றன. பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்ற நவீன வசதிகளுடன் இக்கட்டிடங்களைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதா என்பதும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.
தபால் விநியோகத்திற்கான போக்குவரத்து வசதிகள்
இன்றைய காலத்திற்கேற்பவும், சேவையை விரைவுபடுத்தும் வகையிலும், தேவையான ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அல்லது பொருத்தமான போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.




