மருதமுனை பொது நூலகத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் டிஜிட்டல் மயமாக்கவும், அதன் உட்கட்டமைப்பு மற்றும் பௌதிக வளங்களை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் கூட்டம் மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில், நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீனின் நெறிப்படுத்தலில் நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் நூலகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு மைல்கல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் அவசியம் குறித்து நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் தெளிவுபடுத்தினார்.

- தொழில்நுட்பப் பாய்ச்சல்: நூலகச் சேவைகளை நவீனமயமாக்கி, வாசகர்களுக்கு டிஜிட்டல் முறையிலான வசதிகளை வழங்குதல்.
- வாசிப்பு மாதக் கொண்டாட்டம்: எதிர்வரும் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புதிய நூல் அறிமுகங்கள், புத்தக விமர்சனங்கள், அறிவுப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்.
- மாணவர் & பெண்கள் மையக் கட்டமைப்பு: பெண்களுக்கான சிறப்புப் பட்டறைகள் மற்றும் மாணவர்களின் நூலக வருகையை அதிகரிக்கும் வகையில் பலதரப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
- வளச் சேர்க்கை: நூலகத்தின் பௌதிக சூழலை மேம்படுத்தி, வாசகர்களுக்கான அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துதல்.
இக்கலந்துரையாடலில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.எம். மஸ்றூபா, ஊடக இணைப்பாளர் றாசிக் நபாயிஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எல்.எம். ஜமால்தீன் (J.P), விரிவுரையாளர் அல்-இஃஸான் (எம்.எச்.எம்) உட்பட நூலக அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வாசகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




