சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் காப்பகங்களில் இருந்து 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்தில் நுழையும் இளைஞர், யுவதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “திவியட சவியக்” (Diviyata Saviyak) வீடமைப்புத் திட்டத்தின்கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (04.11.2026) நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வழிநடத்துதலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், கண்ணகி கிராமம்-02 பிரிவைச் சேர்ந்த வி.சுஜிஸ்சனா என்ற பயனாளிக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் புதிய வீடு அமைப்பதற்காக இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் MI.றுபினாஅவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R. திரவியராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
சிறுவர் இல்லங்களில் வளர்ந்து சமூகமயமாக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் இளைஞர், யுவதிகளின் எதிர்காலப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் கோகுலன் பெண்கள் அபிவிருத்தி வெளிகளக உதவியாளர் S.றிஸ்மியா ஜஹான், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அமல திபன் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




