வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் அனைத்துலக மாநாடு – 2026” தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட மட்ட முன்னாயத்தக் கலந்துரையாடல் (14.08.2026) சிறப்பாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை வெளிக்கொணர்வது, அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் இதற்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பல ஆண்டுகளாகத் தமது பிள்ளைகள், கணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாது, எமது தாய்மார்களும் குடும்பங்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் சொல்லொணா வலி, நீதி சார்ந்த போராட்டம் மற்றும் நியாயமான கோரிக்கைகள் இலங்கைக்குள் மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலும் உரிய கவனத்தைப் பெற வேண்டியது அவசியமாகும்.
வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டின் வாயிலாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலைச் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எட்டச் செய்வதுடன், உண்மை மற்றும் நீதிப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றைய கலந்துரையாடலின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது அனுபவங்களையும், எதிர்பார்ப்புகளையும், நீதிக்கான ஆழமான கோரிக்கைகளையும் பகிர்ந்துகொண்டனர். பல தலைமுறைகளாக நீடிக்கும் இப் பிரச்சினைக்கு இனியும் தாமதிக்காமல் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமைக்காக எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.







