சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த “ஷிரான் பாசிக்” (48) மற்றும் அவரது இரு உதவியாளர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அபுதாபியிலிருந்து இயங்கும் எயார் அரேபியா (Air Arabia – 3L-708) விமானம் மூலம் நேற்று இரவு 8:48 மணியளவில் சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்குத் தப்பிச் சென்ற ஷிரான் பாசிக், இலங்கைக்கு பெருமளவிலான போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய 5 கடத்தல்காரர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவராவார். டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர், கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரான் – அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது தொலைபேசியில் வைத்திருந்தமையினாலேயே அந்நாட்டு பாதுகாப்பு படையினரின் சந்தேகத்திற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டார். இவரை விசாரணைக்காகத் தங்ளிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





