கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகப் பணியாற்றும் பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் (CI) வருணி கேஷலா போகஹவத்த, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் ‘CBE-1874’ இலக்க வாகனத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான மாதாந்த குத்தகைத் தவணைக் கட்டணங்களை (Lease) செலுத்தியமைக்கான நிதி மூலங்களைத் தெளிவுபடுத்தத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட இவர், நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகரின் மாதாந்தச் சம்பளம் 1,40,000 ரூபாயாக இருக்கும் நிலையில், குறித்த காரின் மாதாந்தக் குத்தகைத் தவணை மட்டுமே 1,32,000 ரூபாயாக உள்ளதாகவும், அத்துடன் இவரது வங்கிக் கணக்குகளுக்குப் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணித்தார்.




