ஹஸ்பர் ஏ எச்-
உலகளாவிய எல் நினோ சூழ்நிலையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுப்பதற்காக, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இது தொடர்பாக, முக்கியமாக மாகாணத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்திருப்பதோடு, அதிக வெப்பநிலையும் சேர்ந்து, மக்களின் குடிநீர் பிரச்சினையும், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் குழாய் நீரும் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே, இது தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், விவசாய மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கான நீர் முகாமைத்துவம் மற்றும் அதற்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






