கிண்ணியா கடற்கரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்!

டெங்கு நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவது மற்றும் பொது இடங்களை தூய்மையாகப் பேணுவது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று, கடந்த (10.07.2026) அன்று கிண்ணியா பொழுதுபோக்கு கடற்கரை பூங்காவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், “எமது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது போல பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு கருத்துக்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டன.

தற்போதைய சூழலில், வீட்டுச் சூழலை விட பொது இடங்களில் இருந்தே டெங்கு பரவும் ஆபத்து அதிகமாக உள்ளதால், பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது நம் அனைவரதும் கடமை என்பதுடன், அரசாங்கம் முன்னெடுக்கும் சுகாதார நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதும் இந்த நாடகத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.

மாலை வேளையில் கடற்கரைக்குக் பொழுதுபோக்கிற்காக வந்திருந்த பெருந்திரளான பொதுமக்கள் இந்த வீதி நாடகத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து, விழிப்புணர்வு கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

“சுத்தம் சுகம் தரும்! டெங்குவை விரட்டுவோம், சமூகத்தைக் காப்போம்!”

Share the Post: