காத்தான்குடி: மட்டக்களப்பு – காத்தான்குடி டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், அவசரத் தேவைக்கான மாபெரும் இரத்ததான முகாமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) நடத்தப்படவுள்ளது.
புதிய காத்தான்குடி நூராணியா ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொதுமக்கள் சமூகமளித்து தங்களது குருதிக் கொடையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதநேயப் பணியில் பெண் சகோதரிகளும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பங்கெடுக்கும் வகையில், அவர்களுக்காகப் பிரத்தியேகமான முறையில் தனியான இடவசதிகளும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
“உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்”
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினருக்குப் பங்களிப்புச் செய்யும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம்… உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் அமையும் இந்த உன்னதமான மனிதநேயப் பணியில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த ஆரோக்கியமான இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு உயிர்களைக் காக்கப் பங்களிப்புச் செய்யுமாறு டைட்டன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.




