மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஷரீப் வீதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த 68 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்த குறித்த மூதாட்டி, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை வேளையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தினம் மாலை 5:15 மணியளவில் பொருட்கள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், மூதாட்டி தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்ற நபர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





