“கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, அல்லது கற்பதற்கு உதவி புரிபவனாக இரு” என்ற நபிமொழியை அப்படியே நிஜமாக்கிக் காட்டியுள்ளது காலி, டெடல்ல (Dedalla) கிராமம். அரசாங்கத்தின் நிதியுதவிக்காகக் காத்திராமல், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக ஒட்டுமொத்த ஊரே ஒன்றுதிரண்டு 8 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான பாடசாலைக் கட்டிடமொன்றை நிர்மாணித்து, முழு இலங்கைக்கும் ஒரு உன்னத முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது.
காலி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெடல்ல அல்-முபாரக் வித்தியாலயம் (Al Mubarak Maha Vidyalaya) நீண்டகாலமாகப் போதிய கட்டிட வசதிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புப் பற்றாக்குறைகளால் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தது. தற்காலிகக் கொட்டகைகளிலும், நெருக்கடியான வகுப்பறைகளிலும் நமது பிள்ளைகள் படும் அவஸ்தையைக் கண்டு அந்த ஊர் மக்கள் கண்ணீர் வடித்த காலம் மலையேறிப் போயுள்ளது.


“ஒரு பெற்றோர் தன் பிள்ளைக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த, விலைமதிப்பற்ற, யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்” என்பதை ஆழமாக உணர்ந்த டெடல்ல கிராம மக்கள், பழைய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நலன்விரும்பிகள் ஒன்றிணைந்தனர்.
அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டங்களை நம்பியிராமல், “எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கைகளிலேயே” என்ற தாரக மந்திரத்துடன் களம் இறங்கினர். அவர்களின் அசாத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமையின் பலனாக, சுமார் 8 கோடி ரூபாய் செலவில் சகல நவீன வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான மூன்று மாடிக் கட்டிடம் இன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
மாணவர்கள் சுதந்திரமாகவும், காற்றோட்டமாகவும் கற்பதற்கான நவீன வகுப்பறைகள்.
மாணவர்களின் கலை, கலாசார மற்றும் கல்விசார் திறமைகளை வெளிக்கொணரக்கூடிய அதிநவீன அரங்கம்.
எதிர்கால உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையிலான வசதிகள்.
இது வெறும் சிமெந்து கட்டிடம் அல்ல… இது ஒரு கிராமத்தின் நீண்டகாலக் கனவு! பெற்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! சமூக ஒற்றுமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கல்விப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த அற்புதமான புதிய கட்டிடம், வருகின்ற 13ஆம் திகதி கௌரவ பிரதமரின் தலைமையில் உத்தியோகபூர்வமாக மாணவர் சமூகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
வறுமையும் சவால்களும் கல்விக்குத் தடையல்ல, சமூகமாக ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கும் டெடல்ல கிராம மக்கள், பெற்றோர்கள், அள்ளிக்கொடுத்த கொடையாளிகள் மற்றும் பழைய மாணவர்கள் என இந்தப் புனிதப் பணியில் பங்கெடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
இறைவன் இவர்களின் இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு, இரு உலகிலும் நற்கூலிகளை வழங்குவானாக!




