பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள், மக்கள் எதிர்கொள்ளும் பன்முக நெருக்கடிகள் மற்றும் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்குக் கொண்டுவருவதுடன், வரிச் சுமைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மீது ஏற்படும் அழுத்தங்களைக் குறைப்பது தொடர்பாகவும் பல ஆக்கப்பூர்வமான யோசனைகள் இதன்போது பரிமாறப்பட்டன.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தூதுக்குழுவின் பிரதானி ஈவன் பாபேஜார்ஜியோ (Mr. Evan Papageorgiou), இலங்கைக்கான வசாந்திக பிரதிநிதி மார்த்தா வோல்டெமிக்கேல் (Ms. Martha Woldemichael) உட்பட என்ரிக் புளோரஸ் குரியல், தினார் பிரிஹார்டினி, உர்சுலா விரியாடினாதா, ஓஸ்லெம் அய்டின், யோர்போல் யாக்சிலிகோவ், கிளாகோ அகேபனிடாவோர்ன், யான் சென் மற்றும் மனவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஹர்ஷன ராஜகருணா, கபீர் ஹாஷிம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் பிரசன்ன பெரேரா, தலல் ரபி, குசும் விஜேத்திலக்க, திலும் அழகியவன்ன மற்றும் சுரங்க ரணசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்




