உலக சாதனை படைத்தார் ஜேர்மனியின் 19 வயது நீச்சல் வீரர் யோஹான்ஸ் லீப்மேன்!

பெர்லின்: ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது இளம் நீச்சல் வீரரான யோஹான்ஸ் லீப்மேன் (Johannes Liebmann), ‘European Aquatics Championships 2026’ தொடரில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ‘ஃப்ரீஸ்டைல்’ (1500m freestyle) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

இப் போட்டியை 14 நிமிடங்கள் 26.79 விநாடிகளில் (14:26.79) நிறைவு செய்ததன் மூலம் இவர் இந்த வரலாற்றுச் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பாபி ஃபிங்க் (Bobby Finke) 14 நிமிடங்கள் 30.67 விநாடிகளில் நிலைநாட்டிய உலக சாதனையை, 3.88 விநாடிகள் முன்னதாகக் கடந்து லீப்மேன் முறியடித்துள்ளார்.

மேலும், 1500 மீற்றர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் 14:30 நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தைக் கடந்த உலகின் முதல் நீச்சல் வீரர் எனும் வரலாற்றுப் பெருமையையும் இவர் தட்டிச் சென்றுள்ளார்.

இத் தொடரில் முன்னதாக நடைபெற்ற 800 மீற்றர் ஃப்ரீஸ்டைல் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று ஐரோப்பிய சாதனையை (European Record) லீப்மேன் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: