• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி…பொத்துவிலில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்!

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி…பொத்துவிலில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்!

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, பொத்துவில் இரத்த தானம் வழங்குவோர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியும், இரத்ததான நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (14) பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதையும், இரத்த தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் இணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகருமான எம்.எஸ்.அப்துல் மலீக்கினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஒன்றியத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.அப்துல் வாசித் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் முன்பாக ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனியானது, பொத்துவில் பிரதான வீதியூடாகச் சென்று நகரப் பகுதியை அடைந்தது. அங்கிருந்து பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் வரையிலும் சென்று, மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடைபவனியில் ஒன்றியத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.அஷ்ரப், உப செயலாளர் ஐ.எல்.இல்யாஸ், பொருளாளர் இஷாக் சமூன், உப தலைவர் எம்.எச்.எம்.ஜெஸ்ருல் லாபி உட்பட உறுப்பினர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது. இதில் தன்னார்வலர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் குருதியை வழங்கினர். இதன் மூலம் வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்ய முடிந்ததாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.

இரத்த தானம் வழங்குவதன் மூலம் ஒரு தனிமனிதன் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு பொத்துவில் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: