• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம் சம்மாந்துறையில் இடம்பெற்ற பாரிய இரத்த தான முகாம்!

உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம் சம்மாந்துறையில் இடம்பெற்ற பாரிய இரத்த தான முகாம்!

.சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் கடும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பாரிய இரத்த தான முகாம் ஒன்று நேற்று (09) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட உயிர் காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மனிதாபிமானப் பணி, சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அனர்த்த மேலாண்மை நிலையத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த முகாமில், உயிர் காக்கும் உயரிய நோக்கத்துடன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கினர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகப் பின்வருவோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

  • தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா (சம்மாந்துறை பிரதேச செயலாளர்)
  • டாக்டர் எஸ்.ஐ.எம். பாறீஸ் (சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி – MOH)
  • எம்.ஏ.சி.எம். றியாஸ் (அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பிரதிப் பணிப்பாளர்)
  • வீ. வாசீத் அஹமட் (உதவி பிரதேச செயலாளர்)
  • ஜெயசீலன் (சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்)

மேலும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், எஸ்.எல்.எம். பஹ்மி சுலைமான், முஹம்மட் ஹாலீத், ஏ.சி.எம். நயீம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு வர்த்தக நிறுவனங்களான TOP STYLE உரிமையாளர் பிரோஸ், INR MOTORS உரிமையாளர் நூர் முஹம்மட் மற்றும் MRS FRUIT CENTER உரிமையாளர் முனா ஆகியோர் தமது ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.

அவசரகால மீட்புக் குழுவினரின் இந்த சமூகப் பொறுப்புணர்வு மிக்க முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம், அவசர மருத்துவ தேவைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு கையளிக்கப்பட்டதுடன், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மீட்புக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


Share the Post: