• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரர் கைது: சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிரடி நடவடிக்கை!

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரர் கைது: சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அதிரடி நடவடிக்கை!

இலங்கையின் புனிதத்தலங்களில் ஒன்றான அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் (எட்டு புனிதத் தலங்கள்) மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரர், சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த தேரர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, குறித்த தேரரையும், அதற்கு உடந்தையாக இருந்து சிறுமியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் அவரது தாயாரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் தேரருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலை:

  • இச்சம்பவம் தொடர்பாக தேரர் மற்றும் சிறுமியின் தாயார் உட்பட இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்களை இன்று (10) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
  • சந்தேகநபரான தேரரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையின் அதியுயர் மத பீடங்களில் ஒன்றின் பொறுப்பில் இருக்கும் ஒருவரே இவ்வாறான பாரிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை பௌத்த சமூகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share the Post: